
ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தரும், ஆரம்பக் கைத்தொழில் துறை முன்னாள் ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிரதித்தியேக செயலாளராகப் பணியாற்றியவருமான ஒருவரை, 8.1 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், நேற்று (21) லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.
முறையான நடைமுறைகளுக்குப் புறம்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மாத்திரம், பொஸ்பேற் (phosphate) ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை – சந்தேகநபர் ஏற்படுத்திக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சந்தேக நபர் கைதானார்.
தேவையான ஏற்றுமதி அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவியதற்காக, குறித்த நிறுவனங்களிடமிருந்து சந்தேகநபர் – லஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சாட்டுகிறது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



