
அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியவை அரசியலமைப்புக்கு இணங்கவே உள்ளன என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை நாடாமன்றத்தில் இன்று (22) சபாநாயகர் அறிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த விளக்கத்தை அறிவித்த சபாநாயகர், அரசியலமைப்பின் 83-வது பிரிவின் விதிகளின்படி, 22-வது திருத்தச் சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கோ அல்லது அதன் எந்தவொரு பகுதிக்கோ பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம் (referendum) மக்களின் அங்கீகாரம் பெறத் தேவையில்லை என்று நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
‘அரசியலமைப்பின் 121(1) ஆவது பிரிவின் கீழ், உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட ‘அரசியலமைப்பிற்கான 22-வது திருத்தச் சட்டமூலம்’ மற்றும் ‘நீதிமன்றங்கள் சட்டத் திருத்தச் சட்டமூலம்’ ஆகியவை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் பெற்றுள்ளேன் என்பதை அறிவிக்க விரும்புகிறேன்.
அரசியலமைப்பின் 83-வது பிரிவின் விதிகளின்படி, 22-வது திருத்தச் சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கோ அல்லது அதன் எந்தவொரு பகுதிக்கோ சர்வஜன வாக்கெடுப்பு (referendum) மூலம் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அரசியலமைப்பிற்கான 22-வது திருத்தச் சட்டமூலத்தின் 2-வது பிரிவில் உள்ள நிபந்தனையில் (proviso), ’67 வயதை அடையும் நாள்’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக ’67 வயதை முழுமையாகப் பூர்த்தி செய்யும் நாள்’ என்ற சொற்றொடர் மாற்றப்பட வேண்டும்.
மேலும், முதல் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள 06 ஆண்டுகள் என்ற பதவிக்கால வரம்பு, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியில் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் எந்தவொரு நபருக்கும் பொருந்தாது என்ற விதி, 2-வது பிரிவின் இரண்டாவது நிபந்தனையாகச் சேர்க்கப்பட வேண்டும்.
நீதிமன்றங்கள் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் ஏற்பாடுகள், இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என்றும், அதனை நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் உச்ச நீதிமன்றம் மேலும் தீர்மானித்துள்ளது” என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (22) அறிவித்தார்.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடடிப்பது தொடர்பான அரசியலமைப்பிற்கான 22-வது திருத்தச் சட்டமூலம், நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்காரவால் ஓகஸ்ட் 18 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்து, இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையைச் சவால் செய்தனர். அதன்படி மொத்தம் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான, நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வின் முன் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.
செப்டம்பர் 2 அன்று, விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த விளக்கம் சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு அறிவித்தது.
இதற்கிடையில், அரசியலமைப்பிற்கான 22-வது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு அண்மையில் தீர்மானித்தது.



