தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்கவில்லை: நீதிமன்றில் தெரிவிப்பு

ஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை தகவல் – ராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிந்திருந்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக, அரச தரப்புக்காக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து, நீதிமன்றில் அவர் தகவல்களை வழங்கிய போது, இந்த விடயங்களைக் கூறினார்.

முதலாவது ராணுவப் புலனாய்வுப் பிரிவு வவுனியாவிலிருந்தும், மூன்றாவது ராணுவப் புலனாய்வுப் பிரிவு கிரித்தலையிலிருந்தும் இயங்கியதாக அவர் குறிப்பிட்டார். கிரிதலே (Girithale) முகாம் முன்னர் அரசியல் படுகொலைகள் மற்றும் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

‘தம்பியான்’ (Thambiyan) என்று அறியப்பட்ட ஒரு தகவல் அளிப்பவர் – இவர் முன்னாள் விடுதலைப் புலி (LTTE) உறுப்பினராகவும், இந்திய உளவுத்துறையுடன் பணியாற்றியவராகவும் இருந்தவர் – ராணுவ உளவுப் பிரிவுக்குத் தகவல்களை வழங்கினார் எனவும், திலீப பீரிஸ் கூறினார்.

கோப்ரல் சுரங்க அந்தத் தகவல் அளிப்பவரைக் கையாண்டதாகவும், கேணல் ரணவீர அவருக்கு மேலதிகாரியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஸஹ்ரான் ஹாஷிமின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் தம்பியான் – கோப்ரல் சுரங்கவிடம் வழங்கியதாகவும், ஆனால் அந்த உளவுத் தகவல் அப்போதைய ராணுவ உளவுத்துறை பணிப்பாளர் சுல கொடிதுவக்குவிடம் (Chula Kodituwakku) கொண்டு செல்லப்படவில்லை என்றும் திலீப பீரிஸ் குற்றம் சாட்டினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முந்தைய நாள், தாக்குதல் ஒன்று திட்டமிடப்பட்டிருப்பதாகத் தகவல் அளிப்பவர் ராணுவ உளவுத்துறைக்கு எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

“ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் அந்தத் தகவலைக் பொலிஸ் திணைக்களம் அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினருடன் (CID) கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். அதற்குப் பதிலாக, அவர்கள் மௌனம் காத்து தாக்குதல்கள் நடைபெற அனுமதித்தனர். அவர்கள் உடனடியாகச் செயல்பட்டிருந்தால், தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும்” என்று திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்து – ஐந்து நாட்களுக்குப் பிறகு, சாய்ந்தமருதுவில் உள்ள ஒரு வீட்டில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்தும் திலீப பீரிஸ் கவலை வெளியிட்டார்.

இவ்வுயிரிழப்புகள் ராணுவத்தினால் நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாகவே ஏற்பட்டன என்று அவர் கூறியதுடன், அங்குள்ளவர்களை உயிருடன் பிடித்திருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

எனவே, அந்த நபர்கள் அனைவரும் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

தீவிரவாதச் செயல்பாடுகளை விசாரிக்கும் பொறுப்பிலிருந்த SIS (அரச புலனாய்வுச் சேவை) பிரிவின் பொறுப்பாளராக இருந்த பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டாரவுக்கு எதிராக பயணத் தடையை விதிக்குமாறும் திலீப பீரிஸ் கோரினார்.

வரவிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த எச்சரிக்கை தகவலை, 2019 ஏப்ரல் 3 அன்று வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பொன்றிடமிருந்து அப்போதைய அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பெற்றிருந்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நிலந்த ஜயவர்தன அந்தத் தகவலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மல்லவாரச்சியிடம் வழங்கியதாகவும், அவர் அதனை மேலதிக நடவடிக்கைக்காக ரஞ்சன் செனரத் பண்டாராவிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்பின் ரஞ்சன் செனரத் பண்டார கிழக்கு மாகாணத்திற்குச் சென்று, சஹ்ரானின் தம்பியும் பின்னர் சாய்ந்தமருது சம்பவத்தில் கொல்லப்பட்டவருமான செய்னி என்பவரைச் சந்தித்ததாக திலீப பீரிஸ் கூறினார்.

அந்தச் சந்திப்பின்போதே செய்னியை பண்டார கைது செய்திருந்தால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

“அதற்குப் பதிலாக, அவர் செய்னியைச் சந்தித்து, அவருடன் பேசி, தேநீர் அருந்திவிட்டுத் திரும்பினார்,” என்று பீரிஸ் குற்றம் சாட்டினார்.

பண்டார நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில், அவர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு பீரிஸ் கோரிக்கை விடுத்தார்.

குற்றஞ்சாட்டும் தரப்பின் வாதங்களை மறுக்கும் பாதுகாப்புத் தரப்பு

சட்டத்தரணி அசித் சிரிவர்தனவுடன் இணைந்து சுரேஷ் சாலே சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெனாண்டோ, குற்றம்சாட்டும் தரப்பின் வாதங்களை நிராகரித்தார்.

“எந்தவொரு பொய்யான தகவலையும் ‘B’ அறிக்கையில் சேர்க்கலாம். ஆனால், அது ஆதாரமாகிவிடாது” என்று பெனாண்டோ கூறினார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீண்ட வாதங்களை முன்வைத்த போதிலும், சுரேஷ் சாலேரை அக்குற்றச்சாட்டுகளுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தும் எந்தவொரு ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அவர் வாதிட்டார்.

“எனது கட்சிக்காரரின் கீழ் பணிபுரிபவர்களே இச்செயல்களைச் செய்ததாகவே அந்த வாதங்கள் கூறின” என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வழக்கு செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.