தலைப்புச் செய்திகள்

பொதுமன்னிப்பு ரத்தான நிலையில், வேறு வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றில் ஞானசார தேரர் ஆஜரானார்

ஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இன்று (16) புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்; செப்டம்பர் 30-ஆம் திகதி மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019-இல் ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என்று, உச்ச நீதிமன்றம் அறிவித்த நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்புக்காக விதிக்கப்பட்ட 06 வருட சிறைத்தண்டனையில் சுமார் ஒன்பது மாதங்களை அனுபவித்திருந்த நிலையில், அந்தப் பொதுமன்னிப்பின் மூலம் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ராஜகிரிய, நாவல வீதியில் உள்ள ஞானசார தேரரின் பன்சாலைக்க சிறைச்சாலை அதிகாரிகள் சென்றதாகவும், ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று அங்கிருந்தவர்கள் – அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் ‘தி சண்டே ஐலண்ட்’ (The Sunday Island) பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இருப்பினும், ஞானசார தேரருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இக்கூற்றை மறுத்துள்ளன. அத்தகைய அதிகாரிகள் யாரும் ஆலயத்துக்கு வரவில்லை என்றும், அவர் இருக்கும் இடம் தெரியவில்லை என்ற செய்திகள் பொய்யானவை என்றும் அவர்கள் கூறினர்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதற்கு முன்னதாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரங்களுக்காகக் காத்திருப்பதாகக் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.