தலைப்புச் செய்திகள்

37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இவ்வருடம் நடந்துள்ளன; 867 துப்பாக்கிகள் மீட்பு: அமைச்சர் நளிந்த

நாடு முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஜனவரி 01 முதல் செப்டம்பர் 10, 2026 வரையிலான காலப்பகுதியில் 14 – T-56 ரக துப்பாக்கிகள், 31 கைத்துப்பாக்கிகள் (Pistols), 25 ரிவோல்வர்கள் மற்றும் 797 ஏனைய ஆயுதங்கள் உட்பட மொத்தம் 867 துப்பாக்கிகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டு முழுவதிலும் பொலிஸார் 2,404 துப்பாக்கிகளை மீட்டிருந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய விசாரணைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த நளிந்த ஜயதிஸ்ஸ, தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் முக்கிய சந்தேக நபர் இன்னும் பிடிபடவில்லை என்றும் கூறினார்.

அந்தச் சந்தேக நபரை விரைவில் கைது செய்ய அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.