தலைப்புச் செய்திகள்

ஆயிரக்கணக்கான வீட்டுத் திட்டங்களை, நிறைவு செய்வது குறித்து பரிசீலனை

ல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள ஆயிரக்கணக்கான வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

அமைச்சரவையின் அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ரணசிங்க, நாடு முழுவதும் சுமார் 5,000 வீட்டுவசதித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நிறைவு செய்யக்கூடிய திட்டங்களைக் கண்டறிந்து, அவற்றை மீண்டும் செயல்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக, இரண்டு முன்னாள் அமைச்சு செயலாளர்கள் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

முடங்கியுள்ள திட்டங்கள் குறித்த தகவல்களை இக்குழு தற்போது மீளாய்வு செய்து வருவதாகவும், பரிந்துரைகளைத் தயாரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பகுதியளவு கட்டப்பட்ட வீடுகளை முடிக்க முடியாத குடும்பங்களுக்கு, அடுத்த ஆண்டும் உதவி வழங்கப்படும் என்றும், இத்திட்டத்தின் கீழ் சுமார் 2,000 குடும்பங்கள் உதவியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட வீட்டு வசதித் திட்டங்கள் உள்ளிட்ட வீட்டு வசதிப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, தொடர்புடைய பங்குதாரர்களுடன் ஒரு சிறப்பு கூட்டத்தைக் கூட்டவும் அமைச்சு தீர்மானித்துள்ளது.