
இலங்கைக்கு தினசரி தேவையான பாலில் சுமார் 43% மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது என்று விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் ஆண்டு பால் உற்பத்தியை 410 மில்லியன் லீட்டரிலிருந்து 1,200 மில்லியன் லீட்டராக உயர்த்துவதற்காக, இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் ரூ. 1,000 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
பால் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நிக்கவெரட்டிய பண்ணையின் மேம்பாட்டிற்காக கூடுதலாக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நாட்டிற்குத் தேவைப்படும் உயர்தரமான பெண் மற்றும் ஆண் மாடுகள் மற்றும் எருமைகளை உற்பத்தி செய்வதற்காக, இப்பண்ணை ஒரு – மைய இனவிருத்திப் பண்ணையாக மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
நிக்கவெரட்டிய இனவிருத்திப் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வேறு பல முன்னெடுப்புகளும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் நாமல் கருணாரத்ன கூறினார்.
மேலும், உள்ளூர் பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இத்துறையில் அவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
.தேசிய பால் உற்பத்தித் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துதல், மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கால்நடை வளர்ப்புப் பண்ணைகளை நவீனமயமாக்குதல், மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


