தலைப்புச் செய்திகள்

போதைப்பொருளை மாத்திரைகளாக விழுங்கி கடத்த முயன்ற, அங்கோலா நாட்டுப் பெண் கைது

கொக்கைன் போதைப்பொருளைத் தனது உடலுக்குள் மறைத்து, நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 54 வயதான அங்கோலாவைச் சேர்ந்த பெண் ஒருவரை – இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு கைது செய்யப்பட்டுள்ளது. 

சந்தேக நபர், அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாக, கத்தார் ஏர்வேஸ் விமானம் QR654-ல் நேற்று (17) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

சந்தேக நபர் தனது உடலுக்குள் மறைத்து வைத்திருந்த கொக்கைன் அடங்கிய 14 மாத்திரைகளைத் தானாக முன்வந்து ஒப்படைத்துள்ளார்.

மேலும், போதைப்பொருள் அடங்கிய மேலதிக மாத்திரைகளை தான் விழுங்கியதாகவும், அவர் புலனாய்வாளர்களிடம் ஒப்புக்கொண்டார். 

மீட்கப்பட்ட மாத்திரைகளில் 237 கிராம் கொக்கைன் இருந்ததும், அதன் மதிப்பு சுமார் ரூ. 10 மில்லியன் என மதிப்பிடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் – மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரது உடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் மீதமுள்ள மாத்திரைகளை மீட்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.