தலைப்புச் செய்திகள்

இலங்கையில் குழந்தைகள் பிறப்பு வீதம் வீழ்ச்சி

லங்கையில் 2025 ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறைந்து வரும் பிறப்பு விகிதத்திற்கு மத்தியில், குழந்தை பிறப்பை ஊக்குவிக்கத் தேவையான ஆதரவையும் சலுகைகளையும் அரசாங்கம் வழங்கும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார மைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கூறியுள்ளார்.

“2015 முதல் 2025 வரை, நாட்டில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக 2019-க்குப் பிறகு இந்த சரிவு மேலும் அதிகரித்துள்ளது. 

உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களின்படி, இலங்கையில் 2019ஆம் ஆண்டில் 319,010 குழந்தைகள் உயிருடன் பிறந்தன.

இந்த எண்ணிக்கை 2020-ல் 301,706 ஆகவும், 2021-ல் 284,848 ஆகவும், 2022-ல் 275,321 ஆகவும், 2023-ல் 247,900 ஆகவும், 2024-ல் 220,761 ஆகவும், 2025-ல் 214,570 ஆகவும் குறைந்துள்ளது. 

2019 மற்றும் 2025-க்கு இடையில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் சுமார் 33 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளதை இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

தாமதமான திருமணங்கள், குறைந்த திருமண விகிதங்கள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், இனப்பெருக்க வயதுடைய இளைஞர்களின் இடம்பெயர்வு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, தம்பதியர் பிரிதல் உள்ளிட்ட பல காரணங்களை இந்த சரிவுக்கு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும், சிறிய குடும்பங்களுக்கான விருப்பம் அதிகரித்து வருகிறது. 

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களின் அதிகரித்த பங்கேற்பு, குடும்பக் கட்டுப்பாடு குறித்த மாறிவரும் மனப்பான்மைகள், கருத்தடை முறைகளின் பயன்பாடு மற்றும் கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவையும் பிறப்பு விகிதக் குறைவுக்குப் பங்களித்துள்ளன. 

நீண்ட காலத்திற்கு மக்கள்தொகை நிலைத்தன்மையைப் பேணுவதற்கு, இலங்கைக்கு ஆண்டுதோறும் சுமார் 330,000 முதல் 360,000 வரையிலான உயிருள்ள பிறப்புகள் தேவை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இருப்பினும், 2025-ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை, அந்த அளவை விடக் கணிசமாகக் குறைந்து 214,570 ஆக உள்ளது.