
அமெரிக்காவின் முக்கிய ஆயுதக் கையிருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதுடன், ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தற்போதைய அளவில் தொடர்ந்தால், அவை மேலும் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகும் என CNN தெரிவித்துள்ளது.
இந்நிலையில், “போர் நிறுத்தம் முடிந்துவிட்டது” என்று – டொனல்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
ஆயுதங்கள் தொடர்பான இந்த நிலைமை, சீனா அல்லது வட கொரியாவுடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய போரை எதிர்கொள்ளும் அமெரிக்க ராணுவத்தின் திறனைப் பாதிக்கக்கூடும் என்று – நிபுணர்கள் CNN-இடம் தெரிவித்துள்ளனர்.
“கடந்த ஐந்து நாட்களாக நடந்து வரும் போர், இதே வேகத்தில் தொடர்ந்தால், அது ஆயுதக் கையிருப்புகளை குறைத்து, இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு புதிய, உயர் மட்ட அபாயத்தை உருவாக்கும்,” என்று ,ஓய்வுபெற்ற மரைன் கார்ப்ஸ் கேர்னலும், சென்டர் ஃபார் ஸ்ட்ராடஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் என்ற சிந்தனைக் குழுவின் பாதுகாப்பு ஆய்வாளருமான மார்க் கான்சியன் கூறியுள்ளார்.
‘ஒபரேஷன் எபிக் ஃபியூரி’ என்று அழைக்கப்பட்ட ஈரான் மோதலின் ஆரம்ப கட்டத்தில், நீண்ட தூர துல்லியத் தாக்குதல்களுக்கும், எதிரியின் வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படும் – ஆயிரக்கணக்கான முக்கிய ஏவுகணைகளை, அமெரிக்க ராணுவம் செலவழித்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கையிருப்புகள் நாம் விரும்பும் அளவை விடக் குறைவாக உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை என்று, புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் சிந்தனைக் குழுவில் வெளியுறவுக் கொள்கை ஆராய்ச்சியை வழிநடத்தும் மைக்கேல் ஓ’ஹான்லன் கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான முழு அளவிலான சண்டை நிறுத்தப்பட்ட நேரத்தில், பென்டகன் தனது THAAD பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பான்களில் குறைந்தபட்சம் பாதியையும், பேட்ரியாட் வான் பாதுகாப்பு இடைமறிப்பான்களில் கிட்டத்தட்ட பாதியையும், மற்றும் டோமஹாக் தரைத் தாக்குதல் ஏவுகணைகளில் சுமார் 30 சதவீதத்தையும் பயன்படுத்தியிருந்தது என்று CSIS பகுப்பாய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பாதுகாப்புத் துறையின் உள் கையிருப்பு மதிப்பீடுகளை அறிந்த மூன்று நபர்கள் மூலம், இந்தப் பகுப்பாய்வின் துல்லியத்தை CNN முன்னரே உறுதிப்படுத்தியிருந்தது.
அடுத்தடுத்த மாதங்களில் நடந்த குறைந்த தீவிரம் கொண்ட பதிலடித் தாக்குதல்களுக்கு, குறைவான அமெரிக்க ஏவுகணைகளே தேவைப்பட்டதால், இந்தப் போர் நிறுத்தம் – அமெரிக்க ஏவுகணைக் கையிருப்புக்கு ஒரு தற்காலிக ஓய்வை வழங்கியது.
ஆனால், முக்கிய ஏவுகணைகளுக்கான விநியோக விகிதங்கள் குறைவாக உள்ளன என்று – கான்சியன் கூறினார்.
நடப்பு நிதியாண்டின் விநியோக அட்டவணைகளின்படி, பென்டகன் மாதத்திற்குச் சுமார் 15 புதிய டோமாஹாக் ஏவுகணைகளையும் 20 புதிய பேட்ரியாட் ஏவுகணைகளையும் பெற்று வருகிறது. 2026-ல் THAAD ஏவுகணைகள் வழங்கப்படும் என, எந்த முன்னறிவிப்பும் இல்லை.
ஈரான் போருக்கு முந்தைய நிலைக்கு அந்த இருப்புகளை மீண்டும் உருவாக்க, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஆகும் என்று CSIS மதிப்பிட்டுள்ளது.
“பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆயுதங்களை மீண்டும் நிரப்புவதற்கான காலக்கெடு, இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும்” என்று, பென்டகனின் துணை மற்றும் தற்காலிக கணக்காய்வாளராகப் பணியாற்றியவரும், அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டின் மூத்த ஆய்வாளருமான எலைன் மெக்கஸ்கர், சிஎன்என்-இடம் கூறினார்.
போர் தொடங்கியதிலிருந்து ஒரு ஏவுகணையை மாற்றுவதற்காக, காங்கிரஸால் ஒரு டொலர் கூட ஒதுக்கப்படவில்லை என்றும், இதனால் வழக்கமான, மெதுவான வருடாந்திர அமைதிக்கால செயல்முறை மட்டுமே எஞ்சியுள்ளது என்றும், பாதுகாப்பு கொள்முதல் நிபுணரும், ஓய்வுபெற்ற ராணுவ இரு நட்சத்திர ஜெனரலும், அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டுடன் தொடர்புடையவருமான ஜான் ஃபெராரி சுட்டிக்காட்டியுள்ளார்.


