
வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 62 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை அதிகாரிகள் இன்று (27) அழித்தனர்.
இதில், ஏறத்தாழ 40 கிலோகிராம் ‘குஷ்’ என்ற செயற்கை போதைப்பொருளும் அடங்கும்.
அழிக்கப்பட்ட போதைப்பொருட்களில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைப்பற்றிய போதைப்பொருட்களும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களால் அழிக்க உத்தரவிடப்பட்டு அரசாங்கப் பகுப்பாளர் திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களும் அடங்கும்.

புத்தளம், வண்ணாத்தவில்லு, லக்தோட்டவில் உள்ள ஒரு விசேட அழிப்பு நிலையத்தில் அந்தப் போதைப்பொருட்கள் எரிக்கப்பட்டன.
அழிக்கப்பட்ட போதைப்பொருட்களில் 39.710 கிலோகிராம் ‘குஷ்’, 14.097 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்), 2.030 கிலோகிராம் கொக்கைன், 1.002 கிலோகிராம் ஹெரோயின், 4.139 கிலோகிராம் கஞ்சா மற்றும் ஹஷிஷ், 1.200 கிலோகிராம் எம்.டி.எம்.ஏ மற்றும் 26,262 போதை மாத்திரைகள் அடங்கும்.
இந்த அழிப்பு நடவடிக்கையானது நீர்கொழும்பு மேலதிக நீதவான், அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள், தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.


