தலைப்புச் செய்திகள்

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 07 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு

தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ, அரசியல் சலுகைகளுக்கு ஈடாக, நகைகள் மற்றும் டியோர் கைப்பை போன்ற ஆடம்பரப் பொருட்களைப் பெற்ற குற்றத்திற்காக, இன்று (26) அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2025இல் பதவி நீக்கப்பட்ட தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலின் மனைவியான இவர், தனது கணவரின் பதவிக்காலத்திற்கு முன்பும் பின்பும் இந்த லஞ்சங்களைப் பெற்றார் என்று சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கூறினார்.

“முதல் பெண்மணி என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வேலைகளையும் வணிகச் சலுகைகளையும் அவர் வழங்கினார்” என்று நீதிபதி தெரிவித்தார்.

இவர் பெற்ற லஞ்சப் பொருட்களில் – வான் கிளீஃப் & ஆர்பெல்ஸ் நெக்லஸ், டிஃபானி ப்ரோச் மற்றும் ஒரு ஜோடி கிராஃப் காதணிகள் போன்ற நகைகளும் அடங்கும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும் தங்க ஆமை, ஒரு டியோர் கைப்பை, 39 மில்லியன் வோன் (25,349.86 டொலர்) மதிப்புள்ள ஒரு வாஷெரான் கான்ஸ்டன்டின் கைக்கடிகாரம் மற்றும் 140 மில்லியன் வோன் மதிப்புள்ள ஒரு ஓவியம் ஆகியவற்றையும் லஞ்சமாகப் பெற்றுள்ளார் என்றும் நீதிபதி கூறினார்.

முன்னாள் முதல் பெண்மணியின் செயல்கள், அரசு நியமனங்களின் நேர்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கடுமையாகப் பாதித்துள்ளன என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

தனது மருமகனுக்கு அரசுப் பதவி பெற்றுத் தந்த ஒரு கட்டுமான நிறுவன உரிமையாளர், உயர் அதிகாரிகளுடனான தனது தொடர்புகளை விரிவுபடுத்த விரும்பிய ஒரு பாதிரியார், ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவிற்குப் பொருட்களை வழங்க விரும்பிய ரோபோ நாய் விற்பனையகத்தின் தலைமை நிர்வாகி ஆகியோர் அவருக்கு லஞ்சம் கொடுத்தவர்களில் அடங்குவர் என்று நீதிபதி கூறினார்.

நீதிமன்றம் கிம்முக்கு 64.8 மில்லியன் வோன் அபராதம் விதித்ததுடன், லஞ்சமாக வழங்கப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.

கிம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். கிம்முக்கு பாதகமான ஆதாரங்களை நீதிபதி மிகைப்படுத்திக் கூறுகிறார் என்று குற்றம் சாட்டி, அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என அவரது சட்டத்தரணி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

பங்கு முறைகேடு மற்றும் தென் கொரியாவின் யூனிஃபிகேஷன் சர்ச்சிலிருந்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் முதல் பெண்மணி தற்போது சிறையில் உள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு ஏப்ரல் மாதம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது கணவர் 2024-ல் குறுகிய காலத்திற்கு அமுல்படுத்திய ராணுவச் சட்டம் தொடர்பான ஒரு கிளர்ச்சிக்கு மூளையாகச் செயல்பட்டதற்காக, பெப்ரவரி மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.