தலைப்புச் செய்திகள்

கோட்டாவின் ரிட் மனுவை 24ஆம் திகதி எடுத்துக் கொள்வதற்கு நீதிமன்றம் தீர்மானம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணைகளில் தன்னைக் கைது செய்ய வேண்டாம் என உத்தரவு கோரி – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான மேலதிக பரிசீலனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதன்படி, விடயங்களை மேலதிகமாகப் பரிசீலிப்பதற்காக, இந்த ரிட் மனுவை எதிர்வரும் 24ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் – ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகி, நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்தார்.

ஏற்கனவே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வில், நீதியரசர் பிரியந்த பெனாண்டோ தனது தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு வழக்கிலிருந்து விலகினார்.

இதனால் அவ்வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு முன்னிலைக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.