தலைப்புச் செய்திகள்

வழக்குத் தீர்ப்பை முன்கூட்டி கூறிய ஜனாதிபதி: கவனம் செலுத்தக் கோரி, பிரதம நீதியரசரிடம் எதிர்க்கட்சி மனு

நீதிமன்றத் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில், அது தொடர்பாக ஜனாதிபதி கூறியதாகக் தெரிவிக்கப்படும் விடயம் குறித்து – கவனம் செலுத்தக் கோரி, பிரதம நீதியரசரசரிடம் எதிர்க்கட்சி மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக, அதன் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் பீரிஸ்; மகரகமவில் நடைபெற்ற தனது மே தினப் பேரணி உரையின்போது, ​​ஒரு நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதன் முடிவை ஜனாதிபதி குறிப்பிட்டதாகக் கூறினார்.

ஒரு தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பு, அது குறித்து தலைமை நீதியரசருக்கு மட்டுமே தெரியும் என்றும், அத்தகைய தகவலை மூன்றாம் தரப்பினருக்குத் தெரிவிப்பது முறையற்றது என்றும் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் முறையற்ற தலையீடு செய்வது, சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய ஒரு கடுமையான குற்றமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

”இவ்விஷயத்தை உரிய முறையில் பரிசீலிக்குமாறு பிரதம நீதிபதியை வலியுறுத்தி, பல எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் கூட்டாக இந்த மனுவை சமர்ப்பிக்கத் தீர்மானித்தனர்” என முன்னாள் அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.