தலைப்புச் செய்திகள்

இன்று பலஸ்தீனிய கைதிகள் தினமாகும்: இஸ்ரேலியச் சிறைகளில் எத்தனை பலஸ்தீனியர்கள் உள்ளனர் தெரியுமா?

பலஸ்தீனிய கைதிகள் தினம் இன்றாகும். இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் அவல நிலையை நினைவுகூரும் வகையில் பாலஸ்தீனிய கைதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

1974-ஆம் ஆண்டு, பாலஸ்தீன தேசிய மன்றம் (PNC), ஏப்ரல் 17ஆம் திகதியை – பலஸ்தீன கைதிகள் தினமாக அறிவித்தது.

அன்று முதல், இது இஸ்ரேலின் பலஸ்தீன நில ஆக்கிரமிப்புக்கு எதிரான, பலஸ்தீன மக்களின் போராட்டத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு தேசிய மற்றும் சர்வதேச ஒற்றுமை தினமாக விளங்குகிறது.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், 9,600க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள், இஸ்ரேலியக் காவலில் இருந்தனர்.

தடுப்புக்காவலில் உள்ளவர்களில் 3,532 பேர் நிர்வாகக் கைதிகள். இவர்கள் குற்றச்சாட்டு அல்லது விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 342 பேர் குழந்தைகள். 84 பேர் பெண்கள். 119 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

நிர்வாகத் தடுப்புக்காவல் என்பது, பலஸ்தீனியர்களை எந்தக் குற்றச்சாட்டும் விசாரணையும் இன்றி, காலவரையின்றி நீடிக்கப்படக்கூடிய 06 மாத காலத்திற்குத் தடுத்து வைக்கும் ஒரு நீண்டகால இஸ்ரேலியக் கொள்கையாகும்.

உலகில் குழந்தைகளை ராணுவ நீதிமன்றங்களில் விசாரித்து, அவர்களின் அடிப்படை உரிமைகளை அடிக்கடி மறுக்கும் ஒரே நாடு இஸ்ரேல் ஆகும். இந்த மாதம் 342 குழந்தைகள் இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

2000-ஆம் ஆண்டில் இரண்டாவது இன்டிஃபாடா வெடித்ததிலிருந்து, 12,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியக் குழந்தைகள் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.