தலைப்புச் செய்திகள்

யானை தாக்கி முன்னொரு தடவை காயமடைந்த பெண், இன்று யானை தாக்கியதில் உயிரிழப்பு

– பாறுக் ஷிஹான் –

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யானை தாக்கி காயமடைந்த பெண் ஒருவர், இன்று யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

அவரின் வீட்டு முற்றத்தில் வைத்து யானை தாக்கியதால் – குறித்த பெண் உயிரிழந்த நிலையில், அவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் இன்று (08) மதியம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை (8) அதிகாலை குறித்த சம்பவம் நடந்தது.

யானை தாக்கி உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம், மரண விசாரணையின் பின்னர் இன்று மதியம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

சம்மாந்துறை – மஜீத்புரம் மல்வத்தை-03 முகவரியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் (48 வயது) அபூபக்கர் சபீனா பேகம், யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

மசம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் திருமதி எம்.எம். பாத்திமா சாமிலா விடுத்த கட்டளையின் பிரகாரம், பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர், சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர், பிரேதம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குடும்ப பெண் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர், யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு காலில் முறிவு ஏற்பட்டது. அப்பெண்ணின் வீட்டின் அருகில் யானைகள் அதிகளவு வழி மாறி செல்வதாகத் தெரிய வருகிறது.