தலைப்புச் செய்திகள்

நடு விரலைக் காட்டிய நீதியமைச்சர்: ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பப் போவதாக அஜித் எம்.பி தெரிவிப்பு

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார – கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, தனக்கு நடுவிரலைக் காட்டியதாகக் கூறி, எதிர்க்கட்சி எம்.பி. அஜித் பி. பெரேரா சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பப் போவதாக நேற்று தெரிவித்தார்.

“அமைச்சரின் இந்தச் செயல் நாடாளுமன்ற அவமதிப்பாகும். மைக் கொடுக்கப்பட்டாலும் கொடுக்கப்படாவிட்டாலும் – எந்தவொரு எம்.பி.யும் ஒழுங்காக நடந்துகொள்ளக் கடமைப்பட்டவர்” என்று – அஜித் பெரேரா கூறினார்.

வாய்மொழிக் கேள்வி ஒன்றை எழுப்பிய அஜித் பி. பெரேராவிடம், நீதி அமைச்சர் ஹர்ஷனா நாணயக்கார, நடுவிரலைக் காட்டியதால் நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது.

பதிலைச் சமர்ப்பிக்க அமைச்சர் இரண்டு வாரங்கள் கேட்டபோது, ​​அஜித் பெரேரா எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.

இதனையடுத்து அஜித் பெரேரா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்ப விரும்பினார். ஆனால் அதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, அதில் ஒழுங்குப் பிரச்சினை எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

பின்னர், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும்,” என்று சபாநாயகர் கூறினார்.

அதனையடுத்து, அமைச்சருக்கு எதிராக எழுத்துப்பூர்வமான முறைப்பாட்டை சமர்ப்பிக்குமாறு அஜித் பெரேரா எம்.பியை சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.