
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம்) முன்னாள் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோர் மீது – ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தலா 05 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கின் முன் விசார மே 15 அன்று நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

2017-2018 ஆம் ஆண்டில் ஆறு மாத காலத்திற்குள், நாட்டின் எரிபொருள் தேவைகளைப் பெறுவதற்காக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று நீண்ட கால ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டன என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, அதிக விலையில் 27 குறுகிய கால ஒப்பந்தப்புள்ளிகள் செயல்படுத்தப்பட்டன. இதனால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுமார் ரூ. 800 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேற்படி இருவரும் இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.



