
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கொமெய்னி பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றார் என, ஈரான் ஜனாதிபதியின் மகன் நேற்று (10) புதன்கிழமை தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போரின் போது – புதிய உச்ச தலைவருக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் இதனைக் கூறியுள்ளார்.
“மொஜ்தபா கொமெய்னி காயமடைந்ததாக நான் கேள்விப்பட்டேன். தொடர்புகளைக் கொண்ட சில நண்பர்களிடம் நான் கேட்டேன். இறைவனுக்கு நன்றி. அவர் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்” என்று அவர் குறிப்பிட்டு்ளார்.
ஈரான் அரசாங்க ஆலோசகராக பதவி வகிக்கும் யூசுப் பெசெஷ்கியன் தனது டெலிகிராம் சேனலில் இட்டுள்ள பதிவில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
56 வயதான மொஜ்தபா கொமெய்னி, அரிதாகவே பொதுவெளியில் தோன்றி அல்லது அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் கலந்து கொள்வார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்னும் நாட்டுக்கு உரையாற்றவோ அல்லது எழுத்துப்பூர்வ அறிக்கையை வெளியிடவோ இல்லை.
மொஜ்தபா கொமெய்னிக்கு கால்களில் உட்பட காயங்கள் ஏற்பட்டன என்றும், ஆனால் அவர் விழிப்புடன் இருந்துகொண்டு வரையறுக்கப்பட்ட தகவல் தொடர்புடன் மிகவும் பாதுகாப்பான இடத்தில் உள்ளார் என்றும் நியூயார்க் டைம்ஸ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.


