
– அஹமட் –
அக்கரைப்பற்றில் கடந்த 10ஆம் திகதி – தான் செலுத்தி வந்த காரை-ஐ மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய 16 வயது சிறுவன், க.பொ.த சாதரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் – சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சாரதி அனுமதிப் பத்திரமற்ற மேற்படி சிறுவன், கடந்த 10ஆம் திகதி இரவு செலுத்தி வந்த கார், அக்கரைப்பற்று உள் வீதியில் விபத்துக்குள்ளானது. இதன்போது காயமடைந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர் – சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த சிறுவனை – நேற்று 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து விளக்க மறியலில் வைக்கப்பட்ட சிறுவன் நேற்று (16) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை 23ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், குறித்த சிறுவன் இம்முறை க.பொ.த சாதரண தரப் பரீட்சை எழுதவுள்ளமையினால், அவரை பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்குமாறும் உத்தரவு வழங்கியது.
அக்கரைப்பற்றிலுள்ள பாடசாலையொன்றின் ஊடாக மேற்படி மாணவர் க.பொ.த சாதரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகிறார்.
இன்று 17ஆம் திகதி நாடு முழுவதும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமானது.


