தலைப்புச் செய்திகள்

80 அரபுக் கல்லூரிகள், மதரஸாக்களின் பதிவுகளில் சிக்கல்: ஏனைய சமயங்களின் பாடசாலைகளுகளுக்கு பிரச்சினை இல்லை: தடையை நீக்குங்கள் என்கிறார் ஹிஸ்புல்லாஹ்

ரபுக் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களை பதிவு செய்வது தற்போது, இடைநிறுத்தப்பட்டிருப்பதால், பல்வேறு கல்வி சமூக மற்றும் நிர்வாக ரீதியான பாதிப்புகள் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வருவதாகவும், மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.ஏம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

ஏனைய மதத்தவர்களின் சமயப் பாடசாலைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போது, முஸ்லிம்களின் அரபுக் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களைப் பதிவு செய்கின்றமை மட்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் நாடாளுமன்றில் மேலும் பேசுகையில்;

2020 ஆம் ஆண்டு புத்த சாசன மத விவகார மற்றும் கலாச்சார அமைச்சருடைய செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய – மதரஸாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டதை நான் அறிகின்றேன்.

ஆனால் பௌத்த பிரிவேனா பாடசாலைகள், இந்து அறநெறி பாடசாலைகள், மற்றும் கிறிஸ்தவ மிஷினரி பாடசாலைகள் என்பவற்றை பதிவு செய்வதற்கான முறையான அனுமதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படுவதுடன், அது மிகவும் சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றது.

இலங்கையில் செயல்பட்டு வரும் அரபுக் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களை பதிவு செய்வது தற்போதைய நிலையில் இடைநிறுத்தப்பட்டிருப்பதால்,கல்வி, சமூக மற்றும் நிர்வாக ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது.

மதரஸாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டல்களை திணைக்களத்திற்கு அனுமதி வழங்காத காரணத்தினால், நாடு முழுவதிலும் இருந்து பதிவுக்காக விண்ணப்பித்த சுமார் 80 அரபுக் கல்லூரிகளுக்கும் மதரசாக்களுக்கும் பல ஆண்டுகளாக பதிவு செய்வதற்கான அனுமதிகள் கிடைக்கவில்லை.

மேற்படி பதிவு இடைநிறுத்தத்தின் காரணமாக குறித்த அரபுக் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்கள் இயங்குவதில் அதன் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

குறிப்பாக அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அரச ரீதியாக அங்கீகாரம் பெற முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது. இதனால் அவர்கள் மேற்படிப்பு, வேலை வாய்ப்பு மற்றும் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும் பல வருடங்கள் மாணவர்கள் தங்களது கல்வி முயற்சிக்கு – உரிய சட்ட அங்கீகாரம் பெற முடியாத நிலையில் தவிப்பதோடு, மதரஸாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மதரஸாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகள் இஸ்லாமிய மார்க்க கல்வி, ஒழுக்க பயிற்சி மற்றும் சமூக வழிகாட்டுதலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பதிவு இடைநிறுத்தம் காரணமாக இந்த மார்க்க கல்வி தொடர்ச்சியில் இடைவெளி ஏற்பட்டு – சமூகத்தில் தவறான புரிதல்கள் மற்றும் நம்பிக்கை குறைபாடுகள் உருவாகும் அபாயமும் காணப்படுகிறது.

அத்துடன் பதிவு இல்லாத கல்வி நிறுவனங்களாக கருதப்படுவதால் வங்கி கணக்குகள், நிதி உதவிகள், வெளிநாட்டு உள்நாட்டு நன்கொடைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக சட்ட மற்றும் நடைமுறை ரீதியான குழப்ப நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, இவற்றின் பதிவுகளை தொடர்ந்து இடைநிறுத்தி வைத்திருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள ஒரு பாரிய அநீதியாகும்.

கலாசார அமைச்சர் மிகவும் நேர்மையானவர், அதேபோன்று அவருக்கு நல்ல மார்க் அறிவுள்ள – மார்க்கப்பற்றுள்ள ஒருவர் பிரதி அமைச்சராக முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அந்த வகையில், மதரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வது தொடர்பான நடைமுறையை விரைவுபடுத்தி பதிவு செயல்முறையை மீண்டும் ஆரம்பிக்க அல்லது உரிய வழிகாட்டுதலில் வழங்க தங்களது அமைச்சின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.