தலைப்புச் செய்திகள்

சட்டத்தரணி மற்றும் மனைவி கொலைக்கு உதவிய இரு சகோதரர்கள் கைது: பணத்துக்குப் பதில் போதைப் பொருள் பெற்றதாக பொலிஸார் தெரிவிப்பு

ட்டத்தரணி ஒருவரும் அவரின் மனைவியும் தலங்கம – அக்குரேகொட பிரதேசத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிதாரிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் இரு சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 20 மற்றும் 24 வயதுடைய நவகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்களாவர். இவர்கள் நேற்று (16) கொட்டாவ பிரதேசத்தில் கார் ஒன்றில பயணித்த போது கைதாகினர்.

இரண்டு சகோதரர்களும் சட்டத்தரணியின் வாகனம் இருந்த இடம் பற்றிய தகவல்களை வழங்கியதாகவும், தாக்குதல் நடத்தியவர்களுக்கு வசதி செய்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் – காரில் கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் அந்தக் காரினை 07 நாட்களுக்கு வாடகைக்குப் பெற்றிருந்தனர்.

தற்போது வெளிநாட்டிலுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட இரண்டு குற்றப் பிரமுகர்கள் – “டுடு” என்று அழைக்கப்படும் தரிந்து மதுசங்க மற்றும் “மோதர நிபுனா” என்று அழைக்கப்படும் நபர் -ஆகியோர், ஒரு வாரத்திற்கு வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுக்குமாறு கைது செய்யப்பட்டுள்ள சகோதரர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரியவந்துள்ளது. அவர்கள் கொட்டாவ பகுதியில் உள்ள வாடகை சேவையொன்றில் இருந்து கறுப்பு நிற கார் ஒன்றை பெற்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் பின்னர் கொட்டிகாவத்தையில் உள்ள இடமொன்றில் இருந்து துப்பாக்கிகள் அடங்கிய பொதியை முச்சக்கர வண்டியொன்றின் மூலம் பெற்றுக் கொண்டு, துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அக்குரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டத்தரணியைக் கொல்ல அந்தத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும் என்பதை, கைதாகியுள்ள சகோதரர்கள் சுமார் ஒரு வாரமாக அறிந்திருந்தனர் என்று புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் இந்த சகோதரர்கள், தாக்குதலுக்குள்ளான சட்டத்தரணியின் நடவடிக்கைகளை கண்காணித்தனர் என்றும், துப்பாக்கிச் சூடு நடந்த நாளில் சட்டத்தரணியின் வாகனம் சூப்பர் மார்க்கெட் கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்ததை துப்பாக்கிதாரிகளுக்கு தெரிவித்தாகவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரிகள் பின்னர் தனி வாகனத்தில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 44 வயதான சட்டத்தரணி புத்திக மல்லவாராச்சி மற்றும் அவரின் 42 வயது மனைவி டபிள்யூ.ஏ. நிசன்சல ஆகியோர் கொல்லப்பட்டனர்.

பின்னர் சந்தேகநபர்கள் அப்பகுதியை விட்டு ஹோகந்தர நோக்கி சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும், ஆனால் போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் வெளிநாட்டிலுள்ள இரண்டு குற்றப் பிரமுகர்கள் சார்பாக, உள்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் எரிக்கப்பட்ட வாகனம் பின்னர் காலி, பத்தேகம – அகலியா பிரதேசத்தில் உள்ள வீதியொன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

தலங்கம, அக்குரேகொடவில் உள்ள ராணுவத் தலைமையகத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

தொடர்பான செய்தி: சட்டத்தரணி மற்றும் மனைவியை கொலை செய்தவர்களின் வாகனம் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு