
– பாறுக் ஷிஹான் –
அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக நெல் அறுவடை தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இடையிடையே பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்ற அறுவடையின் போது இந்த முறை விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு விளைச்சல் கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டனர்.
கடந்த வருடங்களில் தொடர் நஷ்டத்தை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு இம்முறை கணிசமானளவு விளைச்சல் கிடைத்துள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
ஆயினும் இடையிடையே மழை பெய்து வருவதன் காரணமாக சிரமங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான மழை பெய்து, வயல்களில் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக, அறுவடை இயந்திரங்கள் – நெல் அறுவடையில் ஈடுபடுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன.
மேலும் அரசு உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்யும் வேலைத் திட்டத்தை நெற்சந்தைப்படுத்தும் சபையின் ஊடாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அக்கரைப்பற்று, சாகாமம். தீகவாபி, நாவிதன்வெளி, பாணம, பொத்துவில் மற்றும் மல்வத்தை போன்ற கொள்வனவு நிலையங்கள் இதற்காகத் திறக்கப்பட்டுள்ளன.
66 கிலோ நிறையுடைய வெள்ளை மற்றும் சிவப்பரிசி நெல் மூடையொன்று 5700 முதல் 6000 ரூபாவரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெளி மாவட்டங்களில் இருந்து தினசரி அம்பாறை மாவட்டத்துக்கு வரும் வியாபாரிகளும் நெல் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை பெரும்போக அறுவடை ஆரம்பமாகும் போது 7800 ரூபாவுக்கு விற்கப்பட்ட நெல் விலையே தற்போது குறைவடைந்துள்ளது.


