
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா புகாரியை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீக்கியமைக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களித்த குற்றச்சாட்டின் பேரில், சொஹாரா புகாரியை கட்சியிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் நீக்கியிருந்தது.
இந்த நிலையில் உறுப்பினர் சொஹரா சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த பின்னர், கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும். மேலும் மனு தொடர்பாக தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்குமாறு பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு அறிவிக்கமாற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 31 அன்று நடைபெற்ற கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களித்ததாக சொஹாரா புஹாரி கூறினார்.

அன்றைய தினம், தனது கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டதாகவும், 07 நாட்களுக்குள் அவர் சார்பான விளக்கங்களை சமர்ப்பிக்குமாறு தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த நிலையில் ஜனவரி 02 ஆம் திகதி தொடர்புடைய கடிதம் தனக்குக் கிடைத்ததாக சொஹாரா புஹாரி கூறினார்.
பின்னர், ஜனவரி 09 ஆம் திகதி, தனது ஆட்சேபனைகளை வழங்க கட்சி தலைமையகத்திற்குச் சென்றபோது, அவை விரோதமான முறையில் நிராகரிக்கப்பட்டன என்றும், பின்னர் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை நீக்கும் கடிதம் வழங்கப்பட்டதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான விசாரணை இல்லாமல் தனது கட்சி உறுப்பினர் பதவியை ரத்து செய்ய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்றும், எனவே அந்த முடிவை செல்லாததாக அறிவிக்குமாறும் மனுவில் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.


