தலைப்புச் செய்திகள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை உதவி

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு 01 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நலன்புரி சலுகைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 2025 ஆம் ஆண்டில் வழங்கியுள்ளது.

இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனவரி முதல் நொவம்பர் 2025 வரை, பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 326,246 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ. 964.30 மில்லியன் நிதியுதவியை பணியகம் வழங்கியது.

மேலதிகமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புறப்படும் இலங்கையர்களுக்கு இலவச காப்புறுதித் திட்டத்தை வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்ந்து வழங்கியது. இந்த ஆண்டில் 318,209 தொழிலாளர்களை காப்புறுதி செய்ய ரூ. 397 மில்லியன் செலவிடப்பட்டது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் 1,628 பாடசாலையில் கற்கும் பிள்ளைகளுக்கு ரூ. 50.88 மில்லியன் உதவித்தொகையாக வழங்கப்பட்டது. 4,304 குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்க மேலும் ரூ. 50.25 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது ஏற்படும் இறப்புகள் மற்றும் நோய்களுக்கான இழப்பீடு, இலங்கை திரும்பும்போது சுயதொழில் உதவி, குடும்ப உறுப்பினர்களுக்கான சுகாதார உதவி, பல கடன் திட்டம் மற்றும் ஊழியர் நல நிதியத்தின் மூலம் வழங்கப்படும் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நலன்புரி நடவடிக்கைகளுக்கும் பணியகம் செலவு செய்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக பணியகம் சட்ட நடவடிக்கை எடுத்ததோடு, பாதிக்கப்பட்ட நபர்களின் சார்பாக வழக்குகளைத் தாக்கல் செய்வதன் மூலம் ரூ. 374 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மீட்டெடுப்பதில் வெற்றி பெற்றது.

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில் 40 ஆண்டுகாலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு – அதிக வெளிநாட்டு தொழிலாளர் பணம் அனுப்புதலைப் பதிவு செய்தது. இதன் மூலம் வரவுகள் 8.07 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. இது ரூ. 2,432 பில்லியனுக்கு சமமாகும். இது 2024 உடன் ஒப்பிடும்போது 22.8 சதவீத அதிகரிப்பைக் காட்டுகிறது.