தலைப்புச் செய்திகள்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தை அடையாளமற்றோர் குழப்ப முயற்சி: மக்கள் அவதானம்

– அஹமட் –

அக்கரைப்பற்ற ஆதார வைத்தியசாலையையின் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது. இவர்கள் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை எதிர்த்து, மிக நீண்ட காலமாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து – அவற்றினை சட்ட முறைப்படி நிரூபிப்பதில் தோல்வியடைந்தவர்களின் பின்னணியில் செயற்பட்டு வருபவர்கள் என தெரியவருகிறது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்ட போது, அவருக்கு எதிராக, ஆதாரங்களற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சிலர் முன்வைத்தனர். மேலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ஊடாகவும் – டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சித்தனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் தற்போது, அடையாளமற்ற அமைப்பின் பெயரில் – சிலர் களத்தில் குறித்து, வைத்தியசாலை நிர்வாகத்தை குழப்புவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக இன்று (03) மாலை 4.00 மணிக்கு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக, வைத்தியசாலை அருகில் ஒன்று கூடுவதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதோடு, ‘வைத்தியசாலை நலன்புரி மன்றம்’ என்கிற இல்லாததொரு அமைப்பின் பெயரில் நோட்டீசும் வெளியிட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிருவாகத்தில் காணப்பட்ட பல்வேறு ஓட்டைகளை சீர் செய்து, மக்களின் மதிப்புக்குரிய வைத்தியசாலையாக – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிர் மாற்றியுள்ளார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட காலமாக காணப்பட்ட கடமை அலட்சியங்கள், ஒழுக்கச் சீர்கேடுகளை தனது நேர்மையும் – கட்டுப்பாடுகளும் நிறைந்த நிருவாகத்தினால் டொக்டர் ஜவாஹிர் இல்லாமலாக்கினார். இதனால், பாதிக்கப்பட்ட சிலரின் – பின்னணியிலேயே, வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக, இன்றைய தினம் சிலர் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர் எனவும் அறிய முடிகிறது.

இது குறித்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் கூறுகையில்; அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு – தான் வந்ததிலிருந்து, தனக்கு எதிராக செயற்பட்டு வரும் சிலர்தான், இன்று வைத்தியசாலை நடவடிக்கையை குழப்புவதற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்” என்றார்.

இதேவேளை, வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் முறையான விசாரணைகளின் பின்னர் – பொய் என நிரூபிக்கப்பட்டதோடு, அதன் பின்னால் செயற்பட்டவர்களும் அந்த வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டனர். அவ்வாறு சென்றவர்கள்தான் இப்போது – அடையாளமற்ற முகங்களை வைத்துக் கொண்டு, அவருக்கு எதிராக செயற்பட முயற்சிக்கின்றனர் என, வைத்தியசாலைத் தரப்புகள் கூறுகின்றன.

எனவே, தற்போது, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிறப்பாக இயங்கி வரும் நிலையில், அதனைக் குழப்பி, மக்களுக்கு கிடைக்கும் நல்ல சேவைகளை இல்லாமல் செய்யும் அடையாளமற்றவர்களின் நடவடிக்கைளை முறியடிப்பதற்கு, பொதுமக்கள் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.