
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அந்த நாட்டுக்கு எதிராக பெரியளவிலான ராணுவத் தாக்குதலை நடத்தி விட்டு, இவ்வாறு கைது செய்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலா தலைநகர் கராகஸில் பலத்த தாக்கதல்கள் பதிவாகிய சிறிது நேரத்திலேயே, சனிக்கிழமை அதிகாலை டிரம்ப் தனது சமூக தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்,
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் மனைவி சிலியா புளோரஸும் நடவடிக்கையின் போது கைதாகியதாகவும், இருவரும் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். மதுரோவும் அவரது மனைவியும் எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

“இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமுலாக்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமை வெனிசுலா தலைநகர் கராகஸிலும், மிராண்டா, அரகுவா மற்றும் லா குய்ரா மாநிலங்களிலும் தாக்குதல்கள் நடந்துள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றும் முயற்சியாக இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக வெனிசுலாவும் குற்றம் சாட்டியுள்ளதோடு, அத்தகைய முயற்சிகள் “வெற்றிபெறாது” என்றும் கூறியுள்ளது.
வெனிசுலாவின் மதுரோ, அமெரிக்காவை போதைப்பொருட்களால் நிரப்பி ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு கடத்தல் அமைப்பை வழிநடத்துகிறார் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், வெனிசுலாவின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரின் மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரின் இருப்பிடம் அரசாங்கத்திற்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
சனிக்கிழமை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆடியோ செய்தியில், மதுரோவும் புளோரஸும் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை அரசாங்கம் கோருவதாக ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார்.


