
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வகிக்கும் – முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் பதவியை மீளப் பெற்று, அதனை அட்டாளைச்சேனையில் பொருத்தமான கட்சி ஒருவருக்கு வழங்க வேண்டும் என்றும், இந்தக் கோரிக்கையை கட்சியின் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்வதென்றும், அந்தக் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மூத்த சட்டத்தரணி எம்.எஸ்.எம். கபூர் முன்னிலையில் மத்திய குழுத் தலைவர் தலைமையில் நேற்று (24) இரவு நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், தற்போதைய மத்திய குழுவானது அதன் தலைவர் ஹலீம் தலைமையில் தொடர்ச்சியாக இயங்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கடந்த பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழாவொன்றை நடத்துவதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பதவி வகிக்கின்றார். அவர் கட்சியின் தேசிய பிரதி அமைப்பாளராகவும் பதவி வகிக்கின்ற நிலையில், அட்டாளைச்சேனை அமைப்பாளர் பதவியை அவரிடமிருந்து பெற்று, அட்டாளைச்சேனையிலுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்க வேண்டும் எனவும், இதன் போது தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
மேற்படி தீர்மானங்களை கட்சித் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதெனவும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மத்திய குழு செயலாளரும் அதிபருமான ஏ.சி.எம். ஹாரித், கட்சின் உயர்பீட உறுப்பினரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான யூ.எம். வாஹிட், அட்டாளைச்சேனை பிரதே சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.பி.ஏ. காதர், ஓய்வுபெற்ற சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.எம். அமீன், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் அஸ்வர் சாலி மற்றும் டொக்டர் கே.எல். நக்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





