தலைப்புச் செய்திகள்

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல சம்பந்தப்பட்ட விபத்தில், பொலிஸ் அதிகாரிகள் சரியாக செயற்படாமை தொடர்பில் நடவடிக்கை

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல சம்பந்தப்பட்ட வீதி விபத்து தொடர்பாக, சபுகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொறுப்பதிகாரி உட்பட பல பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யத் தவறியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 11ஆம் திகதி முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப், சபுகஸ்கந்தவில் உள்ள தெனிமுல்ல சந்திக்கு அருகில், ஒரு கார் மற்றும் மோட்டார் பைக் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் உரிய நடைமுறைகளின்படி செயல்பட்டார்கள என்பதைத் தீர்மானிக்க, போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்தினார்.

சபுகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, விபத்து குறித்து விசாரித்த போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் நிலையத்தை மேற்பார்வையிடுவதற்குப் பொறுப்பான சிரேஸ்ட அதிகாரிகள், கடமை தவறிய செயல்களைப் புரிந்தார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடத்தை குறித்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி, தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவக்கு – பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.