
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது என்றும், இதன் காரணமாக, எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை, நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது எனவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபாராஜா தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய காற்றச் சுழற்சி மிக வலுவான ஈரப்பதன் கொண்ட கீழைக் காற்றுக்களுடன் இணைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
ஏற்கனவே இலங்கையின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்று காணப்படுகிறது.
இந்தக் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்காக நகர்ந்து இலங்கைக்கு தெற்காக தெற்கு வங்காள விரிகுடா பகுதியை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் சாத்தியமுள்ளது.
குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப் பெறும் சாத்தியங்கள் உள்ளன.
ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைத்து நிலம் தன்னுடைய நிரம்பல் நிலையை எட்டியுள்ளது. எனவே அந்த பிரதேசங்களில் தொடர்ச்சியாக 50 மி.மீ. க்கு மேற்பட்ட மழை கிடைத்தால், அப்பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன.
எனவே மேற்குறிப்பிட்ட தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.
அத்தோடு மலையகத்தின் சில பகுதிகளில் இக் கனமழை நிலச்சரிவு நிகழ்வுகளைத் தூண்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே 09 தொடக்கம் 13ஆம் திகதிகளில் கனமழை மற்றும் அதனோடு இணைந்த மண்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.
அத்தோடு எதிர்வரும் 15.12.2025 அன்று மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் சந்தர்ப்பம் உள்ளது.
இந்தத் தகவல்களை, நேற்று (07) இரவு 8.00 மணியளவில் அவர் வழங்கியுள்ளார்.


