தலைப்புச் செய்திகள்

மதவாதத்தைக் கையில் எடுப்பவர்களுக்கு எதிராக, சிங்கப்பூரில் உள்ளது போன்ற சட்டங்களைக் கொண்டுவருமாறு ஜனாதிபதியிடம் றிஷாட் கோரிக்கை

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக – இறுக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த  தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள  வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவிடம் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தினால் இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு ‘இலங்கையர் தினம்’ எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13,14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிகழ்வு பற்றி,  சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“இனவாதம், மதவாதம் ஊடாக நாட்டை குழப்பும் சக்திகளால்தான் இந்நாடு இன்னும் பொருளாதார வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.

இலங்கை சுதந்திரமடையும்  போது – தனிநபர் வருமானம் 48 டொலர், ஆனால் அன்று ஜப்பானின் தனிநபர் வருமானம் 49 டொலர்.

ஆகவே, ஜப்பானை விட ஒரு டொலர் வித்தியாசத்தில்தான் அன்று இருந்தோம். இலங்கையையும் ஜப்பானையும் ஒப்பிடும் நாம் – இன்னும் பொருளாதார வீழ்ச்சியைதான் சந்தித்திருக்கின்றோம். நமது நாடு இனவாதத்தினால்தான்  குட்டிச்சுவராகி அதள பாதாளத்திற்குச் சென்றிருக்கின்றது.

ஆகவே, இனவாதம் மதவாத்தை பேசும் எந்த நபராக இருந்தாலும், அவருக்கு எதிரான சட்டத்தை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் இருப்பது போன்ற ஓர் சட்ட மாற்றத்தை நாம் அவசரமாக கொண்டுவர வேண்டும். அதற்கு நாம் பூரண ஆதரவுகளை வழங்குவோம்.

அத்துடன் முஸ்லிம், தமிழ், சிங்கள மற்றும் கத்தோலிக்கம் என, ஒவ்வொரு மார்க்கத்துக்குமான சந்தேகங்களை தீர்ப்பதற்கு அல்லது தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை – ’இலங்கையர் தினம்’ நாளில் மேற்கொள்ள அந்தந்த இன ரீதியான தினைக்களங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அரசாங்கம் முறைப்படுத்தவுள்ள ‘இலங்கையர் தினம்’ என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குவதாகவும் – அங்கு வருகை த்திருந்தவர்கள் தெரிவித்தனர்

இக்கலந்துரையாடலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான க. கோடீஸ்வரன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மனோ கனேசன், செல்வம் அடைக்கலநாதன், ரவீகரன், காதர் மஸ்தான், திகாம்பரம், ராமநாதன் அர்ச்சுனா, மற்றும் சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.