தலைப்புச் செய்திகள்

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்த நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (International Crimes Tribunal) மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்கியதற்காகவும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இப்போது 78 வயதாகிறது.

கடந்த ஆண்டு சுமார் 1,400 பேர் கொல்லப்பட்ட வெகுஜன ஆர்ப்பாட்டங்களை அடக்கியதன் பின்னணியில், அதற்கான தலைமையினையும் கடமைப்பாட்டையும் அவர் கொண்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர் நீதிமன்றில் ஆஜராகாமலேயே விசாரணை நடத்தப்பட்டது.

2024 ஆம் ஆண்டின் எழுச்சி, அதிருப்தியை அடக்குதல், நீதிக்கு புறம்பான தடுப்புக்காவல்கள் மற்றும் கொலைகள் போன்ற குற்றச்சாட்டுகளால், ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதிகாரத்தை இழந்ததிலிருந்து அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

தீர்ப்பை வழங்கியுள்ள தீர்ப்பாயத்தை, ஷேக் ஹசீனாவின் தற்போது தடைசெய்யப்பட்ட அவாமி லீக் கட்சி, “கங்காரு நீதிமன்றம்” என்று கூறியுள்ளதோடு, இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறு ஆதரவாளர்களை வலியுறுத்தியுள்ளது. இதனால் நாட்டில் வன்முறை ஏற்படலாம் எனும் அச்சம் எழுந்துள்ளது.