தலைப்புச் செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் எனக் கூறப்படும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தொடர்பில் விசாரணை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உரையாடும் குரல் பதிவுகள் – சமீபத்தில் வெளியிடப்பட்டமையை அடுத்து, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அதன் பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபருக்கு – இந்த விவகாரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் – நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.