தலைப்புச் செய்திகள்

தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் கணவர் ஹெரோயினுடன் கைது

பேலியகொட நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் கணவர் (வயது 54), ஒரு கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருளுடன் நேற்று (05) கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதானவர் அனுராதபுரம் – எப்பாவல பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் அதிபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எப்பாவல – நல்லமுடாவ சாலை பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்ட 30 வயது சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சோதனையின் போது, ​​எப்பாவல – அடகல பகுதியில் சந்தேக நபருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 கிலோகிராம் 185 கிராம் ஹெராயினை அதிகாரிகள் மீட்டனர்.

மேலும், அருகிலுள்ள தொட்டியில் வீசப்பட்ட ஒரு மின்னணு தராசு மற்றும் ஒரு பொலிதீன் சீல் செய்யும் இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பறந்றினர். இது போதைப்பொருட்களை அளவிடுவதற்கும் பொதி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அதிபரின் மனைவி தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பேலியகொட நகரசபை உறுப்பினர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் மகன் ஒரு மாதத்திற்கு முன்பு 25 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.