தலைப்புச் செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக களஞ்சியசாலையில் தீ விபத்து

– நூருல் ஹுதா உமர் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் களஞ்சியசாலையில் இன்று (29) காலை தீ விபத்து ஏற்பட்டது.

விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதியின் பின்புறம் இன்று காலை சுமார் 7.20 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பயனாக தீ விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீயை அணைப்பதற்காக அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை தீயணைப்புப் படையினர் மட்டுமல்லாமல் சம்மாந்துறை பிரதேச சபையின் தீயணைப்புக் குழுவினரும் இணைந்து பணியில் ஈடுபட்டனர்.

இதேவேளை, தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகமும் சம்மாந்துறைப் பொலிசாரும் ஆராய்ந்து வருகின்றனர் என்று, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.

பாவனைக்கு உதவாத பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தீ விபத்தில் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஆராய்ந்து வருகின்றனர்.