தலைப்புச் செய்திகள்

கெஹல்பத்தர பத்மேயின் தாய் தாக்கல் செய்த மனு தொடர்பில், நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பதாள உலகக் குழு தலைவர் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் கெஹல்பத்தர பத்மேவை டிசம்பர் 02 ஆம் திகதி வரை, குற்றப் புலனாய்வுப் பிரிவில் தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கான அனுமதியை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) வழங்கியது.

தனது மகனின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விசாரணையின் போது அவரை எந்த வெளிப்புற இடத்திற்கும் அழைத்துச் செல்வதைத் தடுக்கவும் – நீதிமன்ற உத்தரவைக் கோரி கெஹல்பத்ர பத்மேவின் தாயார் தாக்கல் செய்த ரிட் மனுவின் விசாரணையின் போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

நீதியரசர்கள் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரிக்கப்பட்டது. பிரதிவாதிகள் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா ஆஜரானார். இதன்போது முன்னர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நீடிப்பதற்கு அவர் ஒத்துக்கொண்டார்.

மனுதாரர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன; “தற்போது சிஐடியினரால் விசாரிக்கப்படும் கெஹல்பத்தர பத்மேயின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சிஐடியின் வளாகத்திற்குள் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதனையடுத்து, சிஐடியில் அவரைத் தடுத்து வைக்கும் உத்தரவை அடுத்த விசாரணை திகதி வரை நீடித்து – நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுதாரரின் தாயார், தனது மகன் தற்போது சிஐடி காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாகவும், சிஐடிக்கு வெளியே வேறு எந்த இடத்திற்கும் அவர் மாற்றப்பட்டால், அவரின் பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாகவும் கூறினார்.

எனவே, அத்தகைய இடமாற்றங்களைத் தடுக்க முறையான உத்தரவை வழங்குமாறு, அவரின் சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்தை கோரியது.