
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும், காஸா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்கின்றன. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காஸாவில் கொல்லப்பட்டவர்களின் 13 உடல்களை வைத்தியசாலைகள் பொறுப்பேற்றுள்ளன.
இந்த நிலையில், காஸா மீதான இஸ்ரேலின் போர் – இனப்படுகொலையைத் தவிர வேறில்லை என்று கத்தார் அமீர் கூறியுள்ளார். மேலும், போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதையும் அவர் கண்டித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறினால், காஸாவில் ‘கனரகப் படையை’ பயன்படுத்தும் பணியில் – மத்திய கிழக்கிலுள்ள பெயரிடப்படாத கூட்டாளிகள் வெளிப்படையாகவும் வலுவாகவும் பங்கேற்பார்கள் என்று – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

“இந்த நாடுகளிடமும், இஸ்ரேலிடமும், வேண்டாம் என்று நான் சொல்லியுள்ளேன். ஹமாஸ் சரியானதைச் செய்யும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் ஹமாஸுக்கு முடிவு கட்டுவது வேகமாகவும், கொடூரமாகவும் இருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 10ஆம் திகதி காஸாவில் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்தானது.


