
இலங்கையில் 83 வீதமான குடும்பங்கள் ‘பிச்சை எடுக்கும் மனநிலையை’ வெளிப்படுத்துவதாக, கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சர் டொக்டர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
இந்த மனப்பான்மை உண்மையான தேவையால் ஏற்படவில்லை என்றும், மாறாக உதவி பெற விரும்புவதால் ஏற்படுகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மக்கள் உதவியை எதிர்பார்ப்பதால், பொருளாதார மற்றும் மன வறுமை இரண்டும் பிரதிபலிக்கும் நிலை ஏற்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையின் தரவை மேற்கோள் காட்டிப் பேசிய அமைச்சர்; 2024 ஆம் ஆண்டில் சுமார் 5.2 மில்லியன் குடும்பங்களில், 4.3 மில்லியன் குடும்பங்கள் ‘அஸ்வெசும’ நலன்புரி உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருந்தன எனவும் கூறினார்.
இந்தப் பிரச்சினை நுண்ணிய அளவிலான பொருளாதாரக் கவலைகளுக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்ட அவர்; முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட சில அரசியல்வாதிகள் – தங்களுக்கான வீடுகள், வாகனங்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட நலன்களை, அரசிடமிருந்து எதிர்பார்க்கும் ஒரு ஆழமாக வேரூன்றிய அரசியல் கலாச்சாரத்தை, இது பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

“உணர்வுபூர்வமாகவோ அல்லது அறியாமலோ, சமூகம் இந்த கலாசாரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைக் கடக்காவிட்டால், நாடு முன்னேற முடியாது” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


