
இலங்கையின் தெற்கு கடலில் மிதந்து வந்த பொதிகளிலிருந்து பெருந்தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடலில் மிதந்து வந்த 51 பொட்டலங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டு நேற்று (14) மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
மேற்படி பொட்டலங்களில் மொத்தம் 670 கிலோ ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்), 156 கிலோ ஹெரோயின் மற்றும் 12 கிலோ ஹாஷிஸ் ஆகியவை இருப்பதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேசச்சாளர் கூறியுள்ளார்.
தெற்கு கடற்கரையில் கடலில் மிதந்து கொண்டிருந்த – போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேற்படி பொட்டலங்கள் நேற்று (14) இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இந்தப் போதைப்பொருள் சரக்கு ‘உனகுருவே சாந்த’ என்று அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என்று சந்தேகிக்கப்படுகிறது.
மூன்று கப்பல்கள் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்த முயற்சிப்பது குறித்து செப்டம்பர் மாத தொடக்கத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் ஆகியவை, பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், டோண்ட்ரா மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இதன்போது சம்பந்தப்பட்ட கப்பல்களின் குழுவினரை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். இருப்பினும், அவர்கள் எந்த குறிப்பிட்ட தகவலையும் வழங்கவில்லை. கப்பல்களில் நிறுவப்பட்ட – கப்பல் கண்காணிப்பு அமைப்பு, அவற்றின் இருப்பிடங்களை மறைக்க செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இலங்கை விமானப்படை இந்த நடவடிக்கையில் பங்கேற்ற போதிலும், மூன்று கப்பல்களின் இருப்பிடம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.



