தலைப்புச் செய்திகள்

தனியார் பஸ் உரிமையாளரைத் தாக்கிய பொலிஸார்; பாதிக்கப்பட்டவருக்கு 01 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரை சட்டவிரோதமாக கைது செய்து, தாக்கி, ஹெரோயின் வைத்திருந்ததாக பொய்யாக குற்றம் சாட்டியதன் மூலம் -அவருடைய அடிப்படை உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் இன்று (13) தீர்ப்பளித்துள்ளது.

நீதியரசர்கள் யசந்த கோடகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரின் ஒப்புதலுடன் நீதியரசர் மேனகா விஜேசுந்தர வழங்கிய தீர்ப்பில், மனுதாரருக்கு தனிப்பட்ட முறையில் 01 மில்லியன் ரூபாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

மனுதாரர் விதானகே சுனில், தான் கொட்டாவ – பெட்டா வழியாக இரண்டு பஸ்களை ஓட விட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஜூலை 9, 2016 அன்று இரவு, ஒரு நண்பரைச் சந்தித்து விட்டு வீடு திரும்பும் போது, ​​தன்னை எதிர்கொண்ட பொலிஸ் அதிகாரிகள், தனது தலையில் துப்பாக்கியை நீட்டி, தன்னை மண்டியிட வைத்து, தன்னைத் தாக்கியதாகவும், பின்னர் ஹெரோயின் வைத்திருந்ததாக பொய்யாகக் குற்றம் சாட்டியதாகவும் அவர் கூறினார்.

அதன் பிறகு அவர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்க மறியலில் செய்யப்பட்டார். ஆனால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கையில், பொலிஸ் காவலில் இருந்தபோது அவருடைய முகம், மார்பு, நெற்றி மற்றும் மணிக்கட்டில் காயங்கள் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த அறிக்கையில், அவருக்கு போதைப்பொருள் பயன்படுத்திய வரலாறு இல்லை என்றும் கூறப்பட்டது.

நீதியரசர் மேனகா விஜேசுந்தர, தீர்ப்பை வழங்கும்போது, அரசியலமைப்பின் 11வது பிரிவை மீறி மனுதாரர் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார். கைது அல்லது போதைப்பொருள் குற்றச்சாட்டை நியாயப்படுத்த நம்பகமான ஆதாரங்களை அதிகாரிகள் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகவும், அவர்கள் வழங்கிய விளக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் நீதிமன்றம் கண்டறிந்தது.

தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களில் அப்போதைய நிலையப் பொறுப்பதிகாரி எல்.பி.பி. சமரசிங்க, பொலிஸ் பரிசோதகர் சிரில் பெரேரா, உப பொலிஸ் பரிசோதகர் பிரேமசிறி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நந்தன பியால், சம்பத் மற்றும் சந்திர நிரோஷன் ஆகியோர் அடங்குவர்.