தலைப்புச் செய்திகள்

இஸ்ரேல் சிறைகளிலிருந்து, பலஸ்தீனர்கள் விடுவிப்பு

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இஸ்ரேலிய கைதிகளையும் ஹமாஸ் விடுவித்த பிறகு, இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகளை வரவேற்க ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையில் கூடியுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இன்று (13) சுமார் 1,700 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

இஸ்ரேலிய சிறைகளில் பல ஆண்டுகளாக கடுமையான மற்றும் இழிவான முறையில் பலஸ்தீனியர்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் விடுவித்த கைதிகளுக்கு பராமரிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகளை வழங்கத் தொடங்கியுள்ளதாக, காஸாவில் உள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதியொருவரின், ஜெருசலேமின் வடக்கே உள்ள கஃப்ர் அகப் நகரிலுள்ள வீட்டில், இஸ்ரேலியப் படையினர் சோதனை நடத்தியுள்ளனர். ​​இதன்போது, விடுவிக்கப்பட்ட கைதியின் சகோதரரை இஸ்ரேலிய படையினர் தாக்கியதாக ‘வஃபா’ செய்தி வெளியிட்டுள்ளது.