தலைப்புச் செய்திகள்

வசிம் தாஜுதீன் கொலை நடந்த போது பின்தொடர்ந்த கஜ்ஜா, பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றினார்: சிஐடி

வசிம் தாஜுதீன் கொலை நடந்தபோது, ​​மீகசரே கஜ்ஜா என்று அறியப்பட்ட அனுர விதானகமகே, தனது பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றி வந்தார் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக நியூஸ்ஃபஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ரக்பி வீரர் இறந்த இரவில் – தாஜுதீனின் காரைப் பின்தொடர்ந்து கஜ்ஜாவின் வாகனம் சென்றதாக தாஜுதீன் வழக்கின் சிசிடிவி ஆதாரங்களில் கண்டறியப்பட்டது. கஜ்ஜாவின் மனைவி தனது கணவரை அந்தக் காட்சிகளில் அடையாளம் கண்டிருந்தார். இருப்பினும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் இதனை மறுத்துள்ளனர்.

இதேவேளை, கஜ்ஜா மற்றும் அவரின் இரண்டு பிள்ளைகளின் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கியதாக – பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி வேட்பாளர் சம்பத் மனம்பேரி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

கஜ்ஜா போன்றவர்களின் கொலைகள் – கடந்த கால முக்கிய வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருந்ததாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். மனம்பேரி தற்போது 90 நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் குற்றத்தைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் பங்கு வகித்ததாக நம்பப்படும் பல சந்தேக நபர்களை சிஐடி தொடர்ந்து விசாரித்து வருகிறது.

தாஜுதீன் கொலை மற்றும் முந்தைய காலங்களில் அரசியல் ரீதியாக நடந்த முக்கிய குற்றங்கள் உட்பட தீர்க்கப்படாத வழக்குகளில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

28 வயதான வசிம் தாஜுதீன், 2012 இல் மரணமானார். அது ஆரம்பத்தில் ஒரு விபத்து என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் தடயவியல் சான்றுகளின் அடிப்படையில், அவரின் மரணம் – கொலை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.