ஜே.வி.பி கூட்டத்தில் இருவரை சுட்டுக் கொன்றவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதியானது
🕔
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) கூட்டம் 2012 ஆம் ஆண்டு கட்டுவன பகுதியில் நடந்த போது, இரண்டு நபர்களை சுட்டுக் கொன்று மற்றொருவரை கடுமையாக காயப்படுத்திய குற்றத்துக்காக – ஜூலம்பிட்டி அமரே என்பவருக்கு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, உச்ச நீதிமன்றம் இன்று (07) உறுதிப்படுத்தியது.
2012 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக தங்காலை மேல் நீதிமன்றத்தால் ‘ஜூலம்பிட்டி அமரே’ என்று பிரபலமாக அறியப்பட்ட ஜி.ஜி. அமரசிங்கவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை> உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி அமரசிங்க தாக்கல் செய்த மேல்முறையீட்டை – நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்ததது. இதன் மூலம் மரண தண்டனை உறுதியானது.
தன்னை நிரபராதியாக விடுவிக்கக் கோரி அமரசிங்க தனது சட்டத்தரணி மூலம் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அதை முழு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
தங்காலை மேல் நீதிமன்றத்தில் அமரசிங்க மற்றும் சிலருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.