தலைப்புச் செய்திகள்

குழந்தையைப் பிரசவித்த நிலையில் அநாதரவாக கைவிட்ட ஒலுவில் – நிந்தவூர் ஜோடிக்கு விளக்க மறியல்

குழந்தையொன்றைப் பிரசவித்து – அதனை அநாதரவாகக் கைவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை நாளை மறுதினம் (03) வரை விளக்க மறியலில் வைக்கமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த ஆணும் பெண்ணும் 17 வயதுடையவர்களாவர். திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம் இவர்களுக்கு மேற்படி குழந்தை பிறந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பெண் – தனது வீட்டில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இதனையடுத்து, தாயிடமிருந்து குழந்தையைப் பெற்றுக் கொண்ட தந்தை, ஒலுவில் – களியோடை ஆறு அமைந்துள்ள பகுதியில், அநாதரவாக அந்தக் குழந்தை கிடந்ததாகவும், அதனை தான் காப்பாற்றிக் கொண்டு வந்ததாகவும் பொய் கூறி, சிகிச்சைக்காக குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்.

இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸார் நடத்திய விசாரணையில், உண்மை அம்பலமானது.

இந்தப் பின்னணியில், குழந்தையின் தந்தை மற்றும் தாயை – நேற்றைய தினம் கைது செய்த பொலிஸார், அவர்களை இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இதன்போதே, அவர்கள் இருவரையும் நாளை மறுதினம் வரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் குறித்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்பட்ட குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்பான செய்தி: ஒலுவில் – களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் தாய் – தந்தை கைது: விசாரணையில் திடுக்கிடும் விடயங்கள் அம்பலம்