தலைப்புச் செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசரமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வது பொருத்தமானது: வைத்தியர் தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவசர இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வது பொருத்தமானது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்‌ஷன் பெல்லான தெரிவித்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சையை கொழும்பு தேசிய மருத்துவமனையில் காத்திருப்போர் பட்டியலின்படி மேற்கொள்ள முடியும் என்றும், இல்லையெனில், முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க ஒரு தனியார் வைத்தியசாலையில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு தெரிவு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

“அவரின் இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் அவரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்பது நல்லது. அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் பெற்றுள்ளதால், அவர் விரும்பும் வைத்திசாலைக்குச் செல்வதற்கான தெரிவு உள்ளது. தேசிய வைத்தியசாலையின் காத்திருப்போர் பட்டியல் சில நேரங்களில் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம்.

எனவே, அவருடைய செலவைத் அவரே ஏற்று – தனியார் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சையை விரைவாகச் செய்யலாம். தற்போது, ​​அவருக்கு ‘கரோனரி தமனிகளில்’ (coronary arteries) அடைப்பு இருப்பதாகவும், அவர் மோசமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள் மூலம், அவரின் இதயம் பலவீனமடைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளோம். அறுவை சிகிச்சை அதை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க உதவும்” என, டொக்டர் ருக்‌ஷன் பெல்லான மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நேற்று (26) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் நாட்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவரின் அலுவலகம் கூறியுள்ளது.

சிகிச்சையை முடித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினரையும் கலந்துரையாடலுக்கு அழைக்க உள்ளதாகவும் அலுவலகம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டதிலிருந்து அரசியலமைப்பு விரோத எதேச்சதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைந்த அனைவருக்கும் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.