
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்து, பிணையில் வெளிவர முடியாத குற்றத்திற்காக அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கை, ‘சர்வாதிகாரத்தை நோக்கி நகரும்’ ஒரு வகையான அரசு நடத்தை என்றும், பல கட்சி ஜனநாயக அமைப்புக்கு எதிரானது என்றும் – எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள்து.
மேலும் அந்த அறிக்கையில்;
கடந்த சில நாட்களாக நடந்து வரும் விடயங்கள் – இலங்கையில் ஜனநாயக வாழ்க்கை முறையின் மீது, வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும் இந்த சூழ்நிலையின் தாக்கங்கள் பற்றியும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அதன் ஆபத்து குறித்துத்தும் – பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது மிக முக்கியம்.
ஒரு அரச தலைவரின் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட செலவுகளை தெளிவாகப் பிரிப்பது கடினம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், நிரூபிக்கப்படாத இன்னும் விசாரணையில் உள்ள குற்றச்சாட்டுக்களை நீதித்துறைக்கு அறிக்கை செய்து, முன்னாள் ஜனாதிபதியை சிறையில் அடைக்கும் செயல், பல கட்சி ஜனநாயகம் மற்றும் ஜனநாயக மதிப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு செயல்முறையாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் சட்டத்தின் தவறான விளக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிகையில் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, முறையான விசாரணையை நடத்துவதற்கு அவசியமானது என்று – எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களத்தை அரசியல்மயமாக்கும் முயற்சிகளின் அறிகுறியாகவும் இந்தக் கைது எடுத்துக்காட்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்த முயற்சிகள் தடையின்றி தொடர அனுமதிக்கப்பட்டால், நமது பிரிக்க முடியாத பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக – நாம் புனிதமாகக் கருதும் மதிப்புகள் மீளமுடியாமல் இழக்கப்படும்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் ஜனநாயக கட்டமைப்பிற்குள் கிடைக்கும் அனைத்து வழிகளிலும் இந்த முயற்சிகளை எதிர்த்துப் போராடவும், எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரத்தின் பொருளைப் பாதுகாக்கவும் – கட்சித் தலைவர்கள், அந்த அறிக்கையின் ஊடாக பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.



