தலைப்புச் செய்திகள்

பணம் அச்சிடுவதால் பணவீக்கம் ஏற்படாது: பிரதியமைச்சர் தெரிவிப்பு

ணம் அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்காது என்று, போக்குவரத்து பிரதியமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட பஸ்கள்கள் மீண்டும் பாவனைக்கு விடப்பட்டமையைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு உரையாற்றும் போது பிரதியமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். இந்த பஸ்கள் பாவனையில் இருந்து நிறுத்தப்பட்டு புதிதாக பொருத்தப்பட்ட இயந்திரங்களுடன் மீண்டும் பாவனைக்கு விடப்பட்டுள்ளன.

“நாட்டின் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப நாணயத்தாள் அச்சிடுதல் மேற்கொள்ளப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். ஒட்டுமொத்த பொருளாதார குறிகாட்டிகளை நாம் பார்க்க வேண்டும். கடந்த 06 மாதங்களுடன் ஒப்பிடும்போது, வருமானம் – செலவு இடைவெளியை 33% க்கும் அதிகமாகக் குறைத்துள்ளோம்.

கடந்த ஆண்டின் முதல் பாதியில், அரச வருவாய் ரூ. 1.8 டிரில்லியனாக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ. 2.3 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. இது 24.7% அதிகரிப்பாகும்.

இந்த நிலையில் செலவு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதாரம் நிலையானதாக உள்ளது, அதில் சந்தேகத்திற்கு இடமில்லை” என்றார்.

இதன்போது, பணம் அச்சிடுவது தவிர்க்க முடியாமல் பணவீக்கத்திற்கு வழிவகுக்குமல்லவா என்று கேட்டபோது;

“அப்படியானால், விலைகள் ஏற்கனவே உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. விலைகள் நிலையாகிவிட்டன, பணவீக்கம் உண்மையில் குறைந்துள்ளது. பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக 20,000 புள்ளிகளை எட்டியுள்ளது. தனிப்பட்ட புள்ளிவிவரங்களை எடுத்து அவற்றைத் தனித்தனியாக பகுப்பாய்வு செய்ய முடியாது. ஒட்டுமொத்தமாகக் கருதும்போது, பொருளாதாரம் நிலையானதாகவே உள்ளது” என, அவர் மேலும் தெரிவித்தார்.