தலைப்புச் செய்திகள்

மனைவியுடன் நெருக்கமாக இருந்த தருணங்களை வீடியோ எடுத்து அனுப்பிய கணவரை கைது செய்ய உத்தரவு

ஆசிரியையாகப் பணியாற்றும் தன்னுடைய மனைவியுடன் நெருக்கமாக இருந்த தருணங்களை ரகசியமாக பதிவு செய்து, அந்த வீடியோவை – தனது மனைவியிடம் படிக்கும் மாணவர் ஒருவருக்கு வாட்ஸப் ஊடாக அனுப்பிய கணவரை, உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான்கசுன் காஞ்சன தசநாயக்க நேற்று (31) உத்தரவிட்டார்.

மருதானை பகுதியைச் சேர்ந்த குறித்த ஆசிரியை, பொலிஸ் – சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்ற விசாரணையின் போது, சந்தேக நபர் தனது மனைவிக்குத் தெரியாமல் அந்த தனிப்பட்ட தருணங்களை வீடியோவாக பதிவு செய்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்கு அடிமையாகிவிட்டதாகக் கூறப்படும் அந்த நபர், தம்பதியினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறின் பின்னர், தனது மனைவியின் மாணவர்களில் ஒருவருக்கு குறித்த வீடியோகளை அனுப்பியுள்ளார்.

இந்தச் செயல் தனது மனைவிக்கு அவமானத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

பொலிஸார் சமர்ப்பித்த ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களைக் கருத்தில் கொண்ட பிறகு, சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.