தலைப்புச் செய்திகள்

போதைப் பொருள் வைத்திருந்ததாக தவறாக கைதாகி, விளக்க மறியலுக்குச் சென்றவர், பிணையில் வந்த பிறகு தற்கொலை

போதைப்பொருள் வைத்திருந்தார் என – தவறாக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்க மறியலுக்கு அனுப்பி பின்னர் பிணை வழங்கப்பட்ட நபர் ஒருவர், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என, கல்கிசை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் கீர்த்தி பெர்னாண்டோ தெரிவித்தார்.

குறித்த நபரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக நேற்று (29) நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், அவர் உயிருடன் இல்லை எனவும் சட்டத்தரணிகள் சங்க தலைவர் கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய கீர்த்தி பெர்னாண்டோ; “தெஹிவளை பொலிஸார் தாக்கல் செய்த 06 வழக்குகளில் போதைப்பொருள் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால், கல்கிசை நீதவான் நீதிமன்றம் நேற்று சந்தேக நபர்களை விடுவித்தது” என்றார்.

தவறாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமையினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக – தற்கொலை செய்து கொண்ட சந்தேக நபரும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் என்றும், சட்ட்தரணிகள் சங்க தலைவர் குறிப்பிட்டார்.

“இந்த நபர் மே 2024 இல் கைது செய்யப்பட்டு, 3200 மில்லிகிராம் ஹெரொயின் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். இது நீதவான் நீதி மன்றத்தினால் பிணை வழங்க முடியாத குற்றமாகும்.

பின்னர் மூன்று மாதங்களுக்குப் பிறகு, மேல் நீதிமன்றம் – அவருக்கு பிணை வழங்கியது.

இருப்பினும், பிணை கிடைத்து 02 மாதங்களுக்குப் பிறகு, அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரச பகுப்பாய்வாளரின் அறிக்கையின்டி, அவர் எந்தவிதமான போதைப்பொருளையும் வைத்திருக்கவில்லை எனத் தெரியவந்தது.

இதனால், அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவர் உயிருடன் இல்லை,” என்று கீர்த்தி பெர்னாண்டோ மேலும் கூறினார்.

“இது போன்ற இன்னும் பல சம்பவங்கள் உள்ளன. தவறான கைது மற்றும் தடுப்புக் காவல்களால் – வேலை இழப்புகள், விவாகரத்துக்கள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு கவனிப்பு இல்லாமை போன்றவை நடக்கின்றன. இது அப்பாவி நபர்களின் வாழ்க்கையை அழிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“தேவையான விசாரணைகளை நடத்தாமல் இந்த தவறான கைதுகளும் தடுப்புக்காவல்களும் நடக்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளால் அரசாங்க நிதியும் வீணடிக்கப்படுகிறது. ஏனெனில் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைக்கு 75,000 ரூபாய் செலவாகும். மேலும் சிறைச்சாலைகளில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய்க்கு மேல் செலவிடப்படுகிறது” என்றும் அவர் விபரித்தார்.

இந்த தவறான கைதுகள் ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறிய கீர்த்தி பெர்னாண்டோ, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.