
பஸ்ஸில் கண்டெடுத்த ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான கைக்கடிகாரத்தை உரியவரிடம் ஒப்படைத்த நடத்துநர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கண்டியிலிருந்து – மஹியங்கணை நோக்கி நேற்று முன்தினம் (22) ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் பயணித்துள்ளனர்.
இதன்போது பெறுமதியான அவர்களின் கைக்கடிகாரமொன்று பஸ்ஸில் தவறியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவரும் – தாங்கள் தங்கும் ஹோட்டலுக்கு சென்ற பின்னரே கைக்கடிகாரம் பஸ்ஸில் தவறியுள்ளதை உணர்ந்துள்ளனர்.
இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளரிடம் அவர்கள் விடயத்தை கூறியுள்ளனர். அதன் பிறகு பஸ்ஸின் டிக்கெட்டில் இருந்த தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்பு கொண்டு கைகடிகாரம் தவற விடப்பட்ட விடயத்தை ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பஸ்ஸை இரவு துப்புரவு செய்யும் போது – நடத்துநர் கைக்கடிகாரத்தை கண்டெடுத்ததாகவும், அதனை உரியவர்களிடம் மறுநாள் ஒப்படைப்பதாகவும் பஸ்ஸின் உரிமையாளர் ஹோட்டல் உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

பின்னர் மஹியங்கணைக்கு சம்பந்தப்பட்ட இரண்டு சுற்றுலா பயணிகளும் சென்றமையை அடுத்து, கைக்கடிகாரத்தை நடத்துநர் ஒப்படைத்தார்.
கண்டியை சேர்ந்த 32 வயதான சந்தன திசாநாயக்க எனும் நடத்துனரே, இவ்வாறு நேர்மையாக நடந்துள்ளார்.
கண்டெடுத்த கைக்கடிகாரத்தை ஒப்படைத்த நடத்துநர் சந்தன திசாநாயக்க, “பணம் மாத்திரமே வாழ்க்கைக்கு முக்கியமில்லை. அதனை விட மனித நேயம் முக்கியமானது. மற்றவர்களின் சொத்து நமக்கு எதற்கு? நேர்மையாக செயற்படுவது நமக்கும் பெருமை, பஸ்ஸுக்கும் பெருமை” என்றார்.
இந்த சம்பவத்தை ‘நியூஸ் பெஸ்ட்’ செய்தியாக்கியுள்ளது.



